நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்பும் , முதலில் விளக்கேற்றி தான் ஆரம்பிப்போம் . அதற்கு காரணம் இறைவன் ஒளியில் இருக்கிறார் என்பது ஐதீகம் .
இந்தப் பதிவில் விளக்கு ஏற்றுதலில் உள்ள சந்தேகங்களுக்கு சரியான பதில்களைப் பற்றிப் பார்க்கலாம் .
1. விளக்கை எப்போது எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் ?
விளக்கை அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது. அப்படி வழிபடுவதால் எல்லா தேவர்களும் நம்முடைய இல்லத்தில் வாசம் செய்வார்கள் . பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு போட முடியவில்லை என்றால் சூரியன் உதயத்திற்கு முன்பு விளக்கினை ஏற்றலாம். அதேபோல் மாலையில் சூரியன் அஸ்தமனமான பிறகு அதாவது 6 மணிக்கு மேல் ஒரு நிமிடம் கழித்து எப்போது வேண்டுமானாலும் விளக்கேற்றலாம் .
2 . எத்தனை முகம் விளக்கு ஏற்றலாம் ?
• ஒரு முகம் விளக்கு ஏற்றினால் மத்திமமான பலன் கிடைக்கும் .
• இரண்டு முகம் விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் உள்ள பகை நீங்கி ஒற்றுமை ஏற்படும் .
• மூன்று முகம் விளக்கேற்றினால் குழந்தை வரம் , புத்திரர் வருகை சம்பந்தமான இன்பங்களை கிடைக்கும்.
• நான்கு முகம் விளக்கு ஏற்றினால் மாடு , மனை , வீடு வாங்கும் யோகம் கிடைக்கும் . அஷ்ட லட்சுமியின் அருள்கிட்டி நமக்கு செல்வம் பெருகும் .
• ஐந்து முகம் விளக்கு ஏற்றினால் செல்வவளம் எப்பொழுதுமே செழிக்கும் .
3 . விளக்கு ஏற்ற வேண்டிய மற்றும் ஏற்றக்கூடாத திசைகள் என்ன ?
• கிழக்கு திசையில் விளக்கேற்றினால் துன்பம் அனைத்தும் தீரும் .
• மேற்கு திசையில் விளக்கை வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கும் .
• வடக்கு திசையில் விளக்கேற்றினால் செல்வம், அறிவு , ஞானம் கிடைக்கும் .
• தெற்கு திசையில் விளக்கை வைத்து தீபம் ஏற்றக்கூடாது . கஷ்டத்தை கொடுக்கும் .
4. எந்த விளக்கு சிறந்தது ?
விளக்கு என்றாலே சிறந்தது தான் அதில் பெரியது சிறியது என்பது கிடையாது . நம்முடைய வீட்டில் வெண்கல விளக்கு , வெள்ளி விளக்கு என பல விளக்குகள் வைத்திருந்தாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுவது கூடுதல் சிறப்பு தரும். அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையவே அச்சப்படும் . நம்முடைய துன்பங்கள் அகன்று போகும்
5. வீட்டில் எலுமிச்சை விளக்கு போடலாமா ?
ஒரு சிலர் கோவிலில் எலுமிச்சை விளக்கு, பூசணி விளக்கு, தேங்காய் விளக்கு போடுவது போலவே வீட்டிலும் எலுமிச்சையை அறுத்து தீபம் போடுவார்கள் . இது முற்றிலும் தவறு. வீட்டில் எப்பொழுதும் எலுமிச்சையை அறுத்து விளக்கு போட கூடாது காரணம் அதை அறுத்தால் அது பிண்டம் ஆகிவிடும். வீட்டில் எலுமிச்சை விளக்கு போட்டால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படும் பிள்ளைகளுக்கு கோபம் அதிகரிக்கும் .
6. தேங்காய் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் போடலாமா ?
ஒரு சில கோவில்களில் தேங்காயை உடைத்து எண்ணையை ஊற்றி தீபம் போடுவார்கள் . அப்படி செய்யக்கூடாது. தேங்காய் விளக்கு போடும் போது எண்ணெய்க்கு மாற்றாக நெய்யை மட்டும் பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
தேங்காயில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும் , தொழில் வளம் சிறக்கும், நெய் உருகுவது போல நம்முடைய துன்பமும் துயரமும் உருகும் என்பது பொருள் .
7. எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்? தீபம் ஏற்றக்கூடாது ?
• நெய் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகும் . நாம் எந்த காரியத்தை எண்ணி விளக்கு ஏற்றுகிறோமோ அந்தக் நல்ல காரியம் சீக்கிரம் கைகூடிவரும் .
• நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை பெற்றுத்தரும் .
• தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றினால் வசீகரம் ஏற்படும் .
• விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும் .
• இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அனைத்து விதமான காரியத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் .
• வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும் .
இந்த ஐந்து எண்ணெயையும் பஞ்ச கூட்டு எண்ணெய் என்று சொல்கிறோம். . இந்த ஐந்தையும் சேர்த்து விளக்கேற்றினால் இறைவன் அருளும், குலதெய்வத்தின் அனுக்கிரகமும் கிடைக்கும் .
• கடலை எண்ணெய் , கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவது முற்றிலும் தவறு .
8. எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது ?
• வினையை தீர்க்கும் விநாயகப் பெருமானுக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் நற்பலன்கள் கிடைக்கும் .
• மகாலட்சுமிக்கு நெய்யினால் விளக்கேற்றுவது செல்வச் செழிப்பை தரும் .
• குலதெய்வத்திற்கு வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் , நெய் ஆகிய மூன்றையும் சேர்த்து விளக்கேற்றலாம் .
• காலபைரவருக்கு நல்லெண்ணெயினால் தீபமேற்றி வழிபட வேண்டும் .
• சிவபெருமான், முருகன், பெருமாள் மற்றும் பிற தெய்வங்களுக்கு பஞ்ச கூட்டு எண்ணெயினால் தீபம் ஏற்றி வழிபடலாம் .
• அம்மனுக்கு வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவற்றால் விளக்கேற்றுவது சிறப்பு வாய்ந்ததாகும் .
9 . எந்த திரிக்கு என்ன நன்மை ?
• பஞ்சுத்திரி .
பஞ்சுத்திரியில் தீபமேற்றி வழிபட்டால் குடும்பம் மகிழ்ச்சி பிறக்கும் , நற்செயல்கள் குடும்பத்தில் நடக்கும் என்பது ஐதீகம் .
• வாழைத்தண்டு திரி .
வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் முன்னோர்களின் சாபம் நீங்கும், தெய்வக் குற்றம் நீங்கும் .
• தாமரைத் தண்டு திரி .
தாமரைத்தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும், முன்ஜென்ம பாவங்கள் மறையும் .
• வெள்ளை நூல் திரி .
வெள்ளை நூல் திரியினால் தீபம் ஏற்றி வழிபட்டால் சகலவித செல்வ வளங்களும் கிடைக்கும் .
• மஞ்சள் நூல் திரி .
மஞ்சள் நூல் திரியினால் தீபம் ஏற்றி வழிபட்டால் நம் உடலில் உள்ள பிணிகள் , நோய்நொடிகள் மறையும் .
• சிவப்பு நூல் திரி.
சிவப்பு நூல் திரியினால் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
• வெள்ளை எருக்கம் பட்டை திரி.
வெள்ளை எருக்கம் பட்டை திரிபோட்டு விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும். குடும்பத்திலுள்ள கஷ்ட நஷ்டங்கள் மறையும். கடன் பிரச்சனைகள் தீரும்.
நன்றி வணக்கம்