தமிழர்களின் பெருமை சொல்லும் சித்தன்னவாசல் ...


பொதுவாக புதுக்கோட்டை மாவட்டம் பெரிய சுற்றுலாத்தலமோ,  பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட மாவட்டம் அல்ல. இருப்பினும் அதிகளவிலான வரலாற்றுப் பதிவுகளையும் , சிறப்புமிக்க குறிப்புகளையும் , ஆதாரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. 


இவ்வளவு ஏன் , இன்றும் தமிழர்களில் கடந்த காலத்தின் சாட்சியாகவும் , கம்பீரமாகவும் விளங்குகிறது. அதில் முதன்மையாய் இருப்பது சித்தன்னவாசல். 

சித்தன்னவாசல் என்பதற்கு "துறவிகளின் இருப்பிடம்" என்பது பொருள். தென்னிந்தியாவில் அஜந்தா குகை என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறது.  இங்குள்ள குடைவரைக் கோயில்கள் முற்பட்ட காலத்தில் உள்ள சமூகப் பதிவுகளை ஓவியங்களாகவும் , குடைவரைகளாகவும் வெளிப்படுத்துகிறது.

இங்குள்ள ஓவியங்கள் ஏழாம் நூற்றாண்டில் அதாவது ( கிபி 600 - 630 ) என்ற காலகட்டத்தில் வரையப்பட்டவை என்று சொல்லப்படுகிறது . இதை வரைந்தவர் சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் அவர் என்று ஒருசில குறிப்புகளின் மூலம் அறியப்படுகிறது .

பல்லவர்களின் காலத்திற்கு முன்பு வரை, கோவில்கள் அனைத்துமே செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் மட்டுமே கட்டப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் முதன்முதலாக குகைக் கோயில்களையும் , குடைவரைக் கோயில்களையும் கட்டியவர் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஆவார் .

சித்தன்னவாசல் சமண மதத்தை மையமாக கொண்டது என்பதற்கு சாட்சியாக இங்குள்ள கல்வெட்டுகளும் பழமையான சின்னங்களும் இந்த ஊரை சுற்றி எங்கும் காணப்படுகிறது. மகேந்திரவர்மன் சமண மதத்தை சேர்ந்தவர் . பிறகு  சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறினார்.

சித்தன்னவாசல் மலையின் மேல்,  படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன அந்த மலையின் கிழக்குப் பக்கமாக பார்த்தால் புகழ்பெற்ற சமண படுக்கைகளை காணலாம் . இங்கு மொத்தம் ஏழு படுக்கைகள் இருக்கின்றன.

இங்கு கிபி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.  அதில் சமணத் துறவிகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது இப்பகுதியை "ஏழடிப்பட்டம் " என்று கூறுவார்கள் .

இக்குகையில் மேல்புறத்தில் உள்ள ஓவியங்கள் உருவத்தாலும்,  நிறத்தாலும் உலகப் புகழ் பெற்றவை. அதற்குக் காரணம் இந்த ஓவியங்கள் அனைத்தும் மூலிகைகளால் வரையப்பட்டது. மூலிகைகளால் வரையப்பட்ட ஓவியங்களை பிரஸ்கோ பெயிண்டிங்ஸ் (FRESCO PAINTINGS ) என்று அழைப்பார்கள்.

ஓவியங்கள் வரையப்பட்டது பல்லவர்கள் காலகட்டத்தில் என்றாலும் , அவை செப்பனிடப்பட்டது ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் காலத்தில் தான் என்று சொல்லப்படுகிறது .

சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியங்கள் என்று வரலாற்று ஆசிரியர்களும் , ஆராய்ச்சியாளர்களும் கூறிவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை பார்க்கும்போது அந்த ஓவியங்கள் யாவும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது .

சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தை சேர்ந்ததா ? அல்லது பாண்டியர்களின் காலத்தை சேர்ந்ததா ? என்ற சந்தேகங்கள் ஒருபுறம் இருந்தாலும்,  தமிழர்களின் கலை நயங்களை பார்க்கும்போது அந்த சந்தேகங்கள் நினைவிற்கு வராமல் அதன் கலைநயம் மட்டுமே நம் கண்முன் தோன்றும் .

தமிழர்கள் வீரத்தில் மட்டுமல்லாமல் கலைநயத்திலும் கைதேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக சித்தன்னவாசல் விளங்குகிறது.

எனவே நமது முன்னோர்களின் வரலாற்று பெருமைகளை போற்றுவதும் , அவற்றை அழியாமல் பேணிக்காப்பதும் நம்முடைய தலையாய கடமையாகும். 

சித்தன்னவாசல் சென்றால் பாண்டிய, பல்லவ மன்னர்களின் கலை நயத்தையும் அவர்களின் தனித்துவமான ஓவிய நுணுக்கங்களையும் கண்டு ரசிக்கலாம். 

எனவே ஒருமுறையாவது சித்தன்னவாசல் சென்று பாருங்கள்.  பழந்தமிழரின் பெருமைகளைக் கண்டு மெய்சிலிர்க்கும் ஒரு வாய்ப்பாக உங்களுக்கு அமையும் என்பதில் எந்நவொரு ஒரு சந்தேகமும் இல்லை.



 நன்றி வணக்கம் 





கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை