இந்தப்பதிவில் இராமாயணத்தில் , அனுமனிடம் சீதை கூறிய ஒரு நீதி கதையைப் பற்றிப் பார்க்கலாம் ...
இராமாயணத்தில் , இராமன் மற்றும் இராவணனுக்கு இடையே யுத்தம் முடிவடைந்து இராவணன் அழிகிறான். அதன்பின்பு இராவணனுக்கு துணை நின்ற அரக்கர்களின் கூட்டத்தை அழிக்க அனுமன் ஆவேசமாக புறப்படுகிறார்.
அப்பொழுது சீதை அனுமனை நோக்கி எனக்குத் தீங்கு செய்த அரக்கர்களுக்கு தீங்கு செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதை மறைமுகமாக ஒரு கதையின் மூலம் அனுமனுக்கு விளக்கினார் .
அந்தக் கதையைப் பற்றி இப்போது விவரமாகப் பார்க்கலாம் .
ஒரு காட்டில் ஒரு வேடன் கண்ணில் தெரிகிற விலங்குகள் , பறவைகள் என அனைத்தையும் ஒவ்வொன்றாக வேட்டையாடிக் கொண்டிருந்தான்.
திடீரென்று புலி ஒன்று புதரில் பதுங்கி இருப்பதை பார்த்த அந்த வேடன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தலை தெறிக்க ஓடினான் . புலியும் அவனை விடாது துரத்தியது. வெகுதூரம் ஓடி களைப்படைந்த அந்த வேடன் இனியும் அவனால் ஓட முடியாது என்று தெரிந்தவுடன் வேகமாக கிடுகிடுவென ஒரு மரத்தின் மேல் ஏறி இளைப்பாறினான்.
சிறிது நேரம் கலித்து திரும்பிப் பார்த்தால் அந்த மரத்தின் மற்றொரு கிளையில் கரடி ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த வேடன் கிடுகிடுவென நடுங்கினான்.
கண் விழித்து அவனைப் பார்த்து அந்த கரடி , ஏன் நடுங்குகிறாய் என்று கேட்டது ...
அதற்கு அவன் , கீழே புலி இருக்கிறது மேலே நீ இருக்கிறாய் அதனால் தான் என் உயிர் போய்விடும் என்று பயப்படுகிறேன் என்று கூறினான் .
இப்போது கரடியைப் பார்த்து அந்த புலி பேசத் தொடங்கியது ,
கரடியாரே ஓய் கரடியாரே ! மேலே உன்னுடன் இருப்பவன் ஒரு வேடன் . காட்டு விலங்குகள் , பறவைகள் என எல்லா இனத்தையும் ஈவு இரக்கமின்றி அழித்தவன் . இவனைப் பழி தீர்த்தே ஆக வேண்டும் ஆகவே உடனே அவனைக் கீழே தள்ளி விடும் என்றது புலி .
கரடி சிரித்துக்கொண்டு சொன்னது, இவன் எப்பொழுது நான் வசிக்கும் மரத்திற்கு வந்து சேர்ந்தானோ அப்போது முதல் அவன் என்னிடம் அடைக்கலம் புகுந்தவன் ஆவான். ஆகையால் அவனுக்கு நான் தீங்கு இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தது.
பிறகு புலி ஒரு சூழ்ச்சி செய்தது, அந்த வேடனை நோக்கி வேடனே எனக்கு இப்பொழுது வெகுவாய் பசிக்கிறது . அதனால் மேலே உள்ள கரடியை நீ தள்ளிவிடு கரடி எனக்கு இறையானால் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் இது சத்தியம் என்னை நம்பு என்று கூறியது.
அதற்கு அந்த வேடன் நிஜமாகவா சொல்கிறாய்? என்று புலியிடம் கேட்டான். அதற்கு புலி நிஜமாகத்தான் என்று உறுதியளித்தது.
சிறிது யோசனைக்குப்பின் வேடன் மெதுவாக கரடி இருக்கும் கிளைக்கு அருகில் சென்று கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளி விட முயன்றான்.
வேடன் மேல் நம்பிக்கை இல்லாமல் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த கரடி நொடிப்பொழுதில் கண்விழித்து மரத்தின் மற்றொரு கிளைக்கு தாவியது.
அதை பார்த்துக்கொண்டிருந்த புலி, ஓய் கரடியாரே ! நன்றாக பார்த்தீரா தன்னிடம் அடைக்கலம் புகுந்தவனை காப்பாற்றவேண்டும் என்று எண்ணிய உங்களையே அவன் கொல்லத் துணிந்தான். அப்படிப்பட்ட அவனை இன்னும் நீங்கள் காப்பாற்றலாமா ? உடனடியாக அவனைக் கீழே தள்ளி விடுங்கள் அவனை நான் ஒரு கை பார்க்கிறேன் என்றும் புலி சொன்னது.
அதற்கு கரடி சிரித்துக்கொண்டே பதில் சொன்னது. அவன் எனக்கு துரோகம் இழைத்தாலும் கூட என்னை நம்பி அடைக்கலம் புகுந்த அவனை நான் ஒருபோதும் மரணிக்க விட மாட்டேன். என்று புலியிடம் சொல்லிவிட்டு போய் படுத்துக் கொண்டது. ஏமாற்றத்திற்கு பின்பு அந்த புலி அந்த இடத்தை விட்டு நடந்தது.
இவ்வாறாக அனுமனிடம் அந்தக் கதையை சீதை சொல்லி முடித்தார்.
தன் இனத்திற்கு தீங்கு செய்த வேடனை கொல்ல நினைத்த புலி மறக்குணம் கொண்டது . தனக்கு அடைக்கலம் கொடுத்த கரடியை கொல்ல நினைத்த வேடனுடைய குணம் அரக்ககுணம் . தான் நன்மை செய்தும் தன்னை கொல்ல நினைத்த வேடனை மன்னித்த கரடியின் குணம் தெய்வ குணமாகும் ..
இதைத்தான் திருவள்ளுவர் இனியவை கூறல் என்ற அதிகாரத்தில்,
" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் . "
என்று கூறியுள்ளார்.
இக்கதையின் மூலம் சொல்லுங்கள் நீங்கள் புலி, கரடி மற்றும் மனிதன் ஆகிய மூவரில் யார் பக்கமென்று.
நன்றி வணக்கம்
Tags:
STORIES